இயக்குநர் சி.வி.ராஜேந்திரன் மறைவு – கவிஞர் வைரமுத்து இரங்கல்

இயக்குநர் சி.வி.ராஜேந்திரன் மறைவு தமிழ்நாட்டுக்கு ஒரு கலை இழப்பு. இளமையும் அழகியலும் கொஞ்சிக் குலாவிய கலைஞன் சி.வி.ராஜேந்திரன். இயக்குநர் ஸ்ரீதருக்குத் தொழில்நுட்பக் கண்ணாகத் திகழ்ந்தவர்.

அறுபதுகளில் முதுமைத் தோற்றத்தில் நடித்துக்கொண்டிருந்த நடிகர் திலகம் சிவாஜியை எழுபதுகளில் இளமைத் தோற்றத்திற்கு அழைத்து வந்த பெருமை அவரைச் சாரும். ராஜா – சுமதி என் சுந்தரி போன்ற படங்கள் இன்னும் கண்ணைச் சுற்றிச் சுற்றி வரும் வண்ணக் கனவுகளாகும்.

அவரோடு நானும் பணியாற்றியிருக்கிறேன் என்பது என் நினைவுகளின் கருவூலமாகும். ஒரு குளிர்ந்த சந்திப்பில் ‘வாரம் ஒருமுறையாவது உங்களை நினைத்துக்கொள்கிறேன்’ என்றேன் நான். ‘நித்தம் ஒரு முறையாவது உங்களை நினைத்துக்கொள்கிறேன்’ என்றார் அவர். கலையும் பண்பாடும் கலந்து நின்ற இயக்குநர் அவர். ஒரு குறிப்பிட்ட கால வெளியைச் சிறகடிக்கும் உற்சாகத்தோடு வைத்திருந்ததில் சி.வி.ஆருக்குப் பெரும் பங்குண்டு.

கலையுலகத்தில் ஒரு மூத்த தலைமுறை கழிந்துகொண்டேயிருப்பது கவலை தருகிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்தார்க்கும் கலையுலகத்தார்க்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.