Inspiring Women Icon Awards 2017

ஜேப்பியார் எஞ்சினியரிங் கல்லூரி வழங்கும் இன்ஸ்பைரிங் விமன் ஐகான் அவார்ட்ஸ் என்ற விருது வழங்கும் விழா ஜேப்பியார் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. குழந்தைகளுக்காக நிதி திரட்ட செயில் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்வில் 17 துறைகளை சார்ந்த 35 பெண்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

இந்த விழாவை குத்து விளக்கேற்றி துவக்கி வைத்த ஜூரிக்கள் ரெஜினா ஜேப்பியார், அப்துல் கனி, நந்தகுமார் மற்றும் கலைச்செல்வி, அமிர்தசெல்வி ஆகியோர் மாணவர்கள் மத்தியில் பேசினர். அவர்களுக்கு ப்ரியா பூச்செண்டு கொடுத்து வரவேற்றார்.

அப்போது, “இந்த விருது பட்டியலில் எங்களுக்கு தேர்ந்தெடுக்கும் வேலை அதிகம் இல்லை, ஒவ்வொரு துறையையும் எடுக்கும்போது இவர் தான், இவருக்கு தான் என ஒருமித்த கருத்தோடு எந்த வித குழப்பமும் இல்லாமல் தேர்ந்தெடுத்தோம். சிறந்த பெண்மணிகளை உங்கள் முன் நிறுத்த நினைத்தோம். இந்த நிகழ்ச்சி பல குழந்தைகளின் நலனுக்காக நடக்கிறது, அவர்கள் வாழ்க்கையில் கரையேற வேண்டும் என விரும்புகிறேன்” என்றார் வருமான வரித்துறை அதிகாரி நந்தகுமார்.

கல்லூரி காலத்தில் மாணவர்கள் பொதுவாக பெண்கள் பின் சுற்றுவார்கள், ஆனால் இந்த யஷ்வந்த், புரூஸ்லீ ஆகியோர் என் பின் சுற்றினார்கள். 18 லட்சம் பணம் சேர்த்து பெற்றோர் ஆதரவற்ற மற்றும் பெற்றோரால் இயலாத 18 குழந்தைகளுக்கு இருதய அறுவை சிகிச்சை செய்து வைத்திருக்கிறார்கள். படிக்கும்போதே பெரிய சாதனையை செய்திருக்கிறார்கள். இப்போது இளைஞர்களை யாரும் ஊக்குவிப்பது இல்லை, அதனால் தான் மாணவர்களை ஊக்குவிக்க, இந்த ஜேப்பியார் கல்லூரியில் இந்த விழாவை நடத்துகிறோம். இது போன்ற நல்ல நோக்கத்துக்கு ஜேப்பியார் கல்லூரி எப்போதும் ஆதரவு அளிக்கும். இந்த விழாவில் இருந்து உத்வேகத்தை நீங்கள் உங்களோடு எடுத்து செல்ல வேண்டும் என்றார் சமூக ஆரவலர் அப்துல் கனி.

யஷ்வந்த் இது மாதிரி விழா செய்யப் போகிறோம் என்று சொன்னவுடனே இங்கே, ஜேப்பியார் கல்லூரியில் தான் நடத்தணும்னு நான் சொல்லிட்டேன். உங்களின் செயில் அமைப்பில் தன்னார்வலர்களாக எங்கள் மாணவர்கள் இணைவார்கள், உங்கள் அமைப்பு மேலும் வளரணும் என்றார் ஜேப்பியார் கல்லூரியின் சேர்மன் ரெஜினா ஜேப்பியார்.

நான்கு வருடங்களுக்கு முன்பு கல்லூரி நாட்களில் நாங்கள் ஆரம்பித்த சமூக தன்னார்வ தொண்டு அமைப்பு தான் இந்த செயில். தற்போது 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் இதில் வேலை செய்கிறார்கள். இதுவரை 18 குழந்தைகளுக்கு இருதய அறுவை சிகிச்சை செய்திருக்கிறோம். இந்த விழாவின் மூலம் இன்னும் 10 குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்க இருக்கிறோம். இந்த விழாவில் இந்தியா முழுக்க 17 துறைகளில் சாதித்துக் கொண்டிருக்கும் 35 பெண்மணிகளுக்கு விருது வழங்குகிறோம். என்னுடைய பெற்றோருக்கும், என்னுடைய வழிகாட்டி அப்துல் கனிக்கும், ஜேப்பியார் கல்லூரிக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் செயில் அமைப்பின் நிறுவனர் யஷ்வந்த்.

ஜேப்பியார் கல்லூரினு சொன்னவுடனே நிச்சயம் கைதட்டல் கிடைக்கும்னு எனக்கு தெரியும். சமூக நோக்கத்தோடு இயங்கி வரும் இந்த செயில் இளைஞர்களுக்காக தான் வந்தேன். எந்த நேரத்தில் அழைத்தாலும் வர தயார்னு சொல்லிட்டேன். என் வாழ்நாளில் காயத்ரி என்ற குழந்தையை மறக்க மாட்டேன். ராமச்சந்திரா மருத்துவமனையில் என் தோழி ஒருவரிடம் சொல்லி, அவர்களுக்கு என்னால் முடிந்த உதவியை செய்தேன். அந்த குழந்தை இப்போது வளர்ந்து நலமுடன் உள்ளது. பல குழந்தைகளுக்கு இருதய அறுவை சிகிச்சை செய்து வரும் இந்த இளைஞர்களின் நல்ல நோக்கம் நிறைவேறணும். இந்த விருதை பெற்றதில் பெருமை அடைகிறேன். வாழ்க்கையில் நல்லதே நினையுங்கள், நல்லதே நடக்கும் என்றார் சினிமா துறையில் விருது பெற்ற நடன இயக்குனர் கலா மாஸ்டர்.

இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியில் விளையாடிய நிரஞ்சனா நாகராஜனுக்கு விளையாட்டு துறையில் சாதித்த பெண்மணி என விருது வழங்கப்பட்டது. விருது வாங்கிய நிரஞ்சனா அவரை கிரிக்கெட் விளையாட ஊக்குவித்த பெற்றோருக்கு நன்றி தெரிவித்தார். அத்தோடு விழாவுக்கு வந்திருந்த அவரது தாயாரை மேடையில் ஏற்றி பெருமிதத்தோடு அவரை கவுரவப்படுத்தினார்.

மீடியா துறையில் விருது பெற்ற பிக் எஃப் எம் ஆர் ஜே மிருதுளா பேசும்போது, “ஆர்ஜே ஆகிய நான் சமூகத்துக்கு ரேடியோ மூலம் என்ன விஷயங்களை கொண்டு சேர்க்க முடியும் என முதலில் நினைத்தேன். பின் அதன் மூலம் பல விஷயங்களை செய்ய முடியும் என கற்றுக் கொண்டேன். படிப்பின் மூலம் சமுக மாற்றத்துக்கான சில விஷயங்களை செய்து சமூகத்தை மாற்றலாம். பெண்கள் தன்னம்பிக்கையோடு போராட வேண்டும்” என்றார்.

நான் ஒரு சாதாரண அரசு கல்லூரியில் தான் எஞ்சினியரிங் படித்தேன். படித்து விட்டு ஏதாவது ஒரு வேலைக்கு போயிருக்கலாம். ஆனால் எனக்குள் இருந்த ஒரு ஆர்வத்தால் தான் ராணுவத்துக்கு சென்றேன். என் பெற்றோரும் எந்த தயக்கமும் இன்றி எனக்கு உறுதுணையாக இருந்தனர். தென்னிந்தியாவில் ராணுவத்தை பற்றிய ஆர்வமும், புரிதலும் மிகக் குறைவு. நிறைய பேர் தன்னம்பிக்கையோடு ராணுவத்துக்கு வர வேண்டும் என்றார் பாதுகாப்பு துறையில் விருது பெற்ற மேஜர் மாலினி.

19 வயதிற்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை போட்டிக்கு கேப்டனாக இருந்த மாற்றுத் திறனாளி ப்ரீத்தி சீனிவாசனுக்கு விளையாட்டு துறையில் விருது வழங்கப்பட்டது. விருது பெற்ற அவர் பேசும்போது, “நீங்கள் அனைவரும் எழ முடியும் என்ற நம்பிக்கை உங்களுக்கு இருக்கிறது, ஆனால் அது எங்களால் முடியாது. எனது உடல்நிலையால் ஒரு கல்லூரியில் கூட என்னால் சேர்ந்து படிக்க முடியவில்லை. லிஃப்ட், சாய்தளம் எதுவும் இல்லை, அதனால் கல்லூரியில் சேர்க்க முடியாது என கூறி விட்டார்கள். திரையரங்கு, ஷாப்பிங் என இந்த வீல் சேரில் அமர்ந்து எங்கும் போக முடிவதில்லை. அனைத்து பொது இடங்களிலும் நாங்கள் வீல் சேரில் செல்லும் வகையில் வசதிகளை செய்து தாருங்கள். எங்களுக்கும் மதிப்பு கொடுங்கள், முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ ஒரு தொண்டு நிறுவனத்தை நடத்தி வருகிறேன். இந்தியாவில் 38 நிமிடங்களுக்கு ஒருவர் விபத்தில் தண்டுவட பாதிப்புக்கு உள்ளாகிறார். அதனால் கவனமாக வண்டி ஓட்டுங்கள், ஹெல்மட் அணிந்து கொள்ளுங்கள்” என்றார். அவருக்கு அனைவரும் எழுந்து நின்று கைதட்டினர்.

ரெஜினா ஜேப்பியார், நந்தகுமார், அப்துல் கனி, தினேஷ்குமார், சாம் பால் உட்பட பலரும் கலந்து கொண்டு விருதுகளை வழங்கினர். நடிகை பூஜா தேவரியா, பாலம் சில்க்ஸ் ஜெயஸ்ரீ, தேசிய விருது பெற்ற 12 வயது சிறுமி பாடகி உத்ரா உன்னிகிருஷ்ணன், மருத்துவர் ஆண்டாள் உட்பட பல பெண்மணிகளும் விருது பெற்றுக் கொண்டனர்.பெண்களுக்கான பல வேறு அமைப்புகளில் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் வரலக்ஷ்மி , திரை உலகிற்கான விருதை பலத்த கரகோஷத்துக்கு இடையே பெற்றுக் கொண்டார்.

விழாவில் வைரபாரதி பாடல் வரிகளில் ஜோன்ஸ் ரூபர்ட் இசையமைத்து, ஜிதேந்திரா ஒளிப்பதிவில் யஷ்வந்த் இயக்கிய செயில் அமைப்பின் இசை ஆல்பம் அனைத்து ஜூரிக்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்களால் வெளியிடப்பட்டது. விழாவில் பிக் பாஸ் ஜூலியானா தலைமையில் டான் பாஸ்கோ நடன குழுவின் நடன நிகழ்ச்சியும், சுமந்த் என்ற மாணவரின் ட்ரம்ஸ் இசை நிகழ்ச்சியும் நடைபெற்றது.

Inspiring Women Icon Awards 2017 (5)Inspiring Women Icon Awards 2017 (6)Inspiring Women Icon Awards 2017 (8)Inspiring Women Icon Awards 2017 (9)Inspiring Women Icon Awards 2017 (1) Inspiring Women Icon Awards 2017 (2) Inspiring Women Icon Awards 2017 (3) Inspiring Women Icon Awards 2017 (4)