அக்-6ல் ‘களத்தூர் கிராமம்’ ரிலீஸ்

A.R மூவி பாரடைஸ் சார்பில் A.R.சீனுராஜ் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் தான் ‘களத்தூர் கிராமம்’. சரண் கே. அத்வைதன் இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.. இதில் கிஷோர், யக்னா ஷெட்டி, சுலீல் குமார், மிதுன், அஜய்ரத்னம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இசைஞானி இளையராஜா இந்தப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இசைஞானி இசையமைத்துள்ள 1005வது படம் இது என்பது இந்தப் படத்தின் சிறப்புகளில் ஒன்று.

இந்தப் படம் கடந்த செப்-15ஆம் தேதியன்றே வெளியாக இருந்தது. ஆனால் சரியான எண்ணிக்கையில் தியேட்டர்கள் கிடைக்காத நிலையில் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டது. அதற்கு முன்னதாக இந்தப் படத்தின் பத்திரிகையாளர் காட்சி திரையிடப்பட்டப்போது, அனைத்து பத்திரிகையாளர்களின் பாராட்டையும் பெற்றது..

தற்போது களத்தூர் கிராமம் வரும் அக்-6ஆம் தேதி ரிலீஸாக இருக்கிறது.

இந்நிலையில் படம் குறித்து தயாரிப்பாளர் A.Rசீனுராஜ் நம்மிடம் சில சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துகொண்டார்..

“இப்படத்தில் நடித்துள்ள கிஷோர் உள்ளிட்ட நடிகர்கள் அனைவருமே தங்களது நூறு சதவீத பங்களிப்பை தந்துள்ளனர்.. இரண்டு வருடங்களாக நடைபெற்ற கடுமையான படப்பிடிப்பில் முகம் சுளிக்காது படக்குழுவினர் அனைவரும் ஒத்துழைப்பு தந்தது மறக்கவே முடியாது..

களத்தூர் கிராமம் படத்தின் கதை நடக்கும் கதைக்களம் குறித்து நாங்கள் மனதில் நினைத்து வைத்த மாதிரியான கிராமத்திற்கான தேடலில் பல நாட்களாக எதுவுமே கிடைக்கவில்லை.

கிட்டத்தட்ட 125 கிராமங்கள் வரை பார்த்தும் எதுவும் செட்டாகததால் கொஞ்சம் சோர்வு அடைந்ததும் உண்மைதான்.

அந்தநிலையில் தான் விளாத்திகுளம் பகுதியில் உள்ள கிராமங்களை பார்க்கலாம் என கிளம்பினோம். போகும் வழியில் புதுப்பட்டி என்கிற கிராமத்திற்குள் சென்றபோது அங்குள்ள கோவிலின் முன்னால் நாங்கள் சென்ற வாகனம் நின்றது..

அதை ஒரு தடங்கல் என நினைக்காமல், சரி.. வண்டி சரியாகும் வரை புதுப்பட்டி கிராமத்தை உள்ளே சென்று பார்க்கலாம் என உள்ளே நுழைந்தால், நாங்கள் மனதில் நினைத்து வைத்த ‘களத்தூர் கிராமம்’ ஆகவே அச்சு அசப்பில் இருந்தது அந்த ஊர். இப்படித்தான் களத்தூர் கிராமத்தை நாங்கள் கண்டுபிடித்தோம்..

நாங்கள் படப்பிடிப்பு நடத்திய பகுதி மிகவும் வறண்ட பகுதி.. சுமார் ஐந்து கிமீ சுற்றுப்புறத்திற்கு வேறு எந்த ஊரும் இல்லை. சில நேரங்களில் தண்ணீர் வசதி இல்லாமல் கூட கஷ்டப்பட்டு படப்பிடிப்பை நடத்தினோம்.. கிட்டத்தட்ட இரண்டு வருட காலம் விட்டுவிட்டு நடைபெற்ற படப்பிடிப்பின்போது அந்தப்பகுதி மக்கள் எங்களுக்கு நிறையவே ஒத்துழைப்பு தந்தனர்..

ஒருநாள் படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்தபோது திடீரென மழைபெய்ய ஆரம்பித்தது.. அன்றைய தினம் மிக முக்கியமான காட்சியை படமாக்க வேண்டி இருந்தது. இதற்காக கிஷோர் சுமார் ஆறு மணி நேரம் மேக்கப் போட்டு தயாராகி இருந்தார், இந்த நிலையில் மழை பெய்ய ஆரம்பித்ததும், என்ன செய்வதென தெரியாத நிலையில், படக்குழுவினர் அனைவரும் ஒன்றாக பிரார்த்தனை செய்ய ஆரம்பித்தனர்..

சொன்னால் நம்ப மாட்டீர்கள் அடுத்த சில நிமிடங்களிலேயே மழை கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து சுத்தமாக நின்றே விட்டது.. நாங்கள் படப்பிடிப்பை தடங்கலின்றி நடத்தி முடித்தோம்.. ஆனால் இதைவிட ஆச்சர்யம் என்னவென்றால் நாங்கள் படப்படிப்பு நடத்திய கிராமத்தை தவிர சுற்றியுள்ள கிராமங்களில் எல்லாம் மழை விடாமல் கொட்டித்தீர்த்தது தான் பிரார்த்தனைக்கு பலன் உண்டு என உணர்ந்துகொண்ட முக்கிய தருணம் அது.

களத்தூர் கிராமம் படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்தால் படம் இன்னும் மக்களிடம் எளிதாக சென்று சேரும் என விரும்பி அவரை சந்தித்தபோது எங்களிடம் ஒரே ஒரு நிபந்தனை விதித்தார். கதை நன்றாக இருக்கிறது, ஆனால் படத்தை நீங்கள் எப்படி எடுப்பீர்கள் எனத்தெரியாது. படத்தை எடுத்துவிட்டு வந்து காட்டுங்கள். அதைப் பார்த்துவிட்டு பிறகு முடிவு செய்கிறேன்’ என சொல்லிவிட்டார்.

அவர் சொன்னபடி, படத்தை எடுத்து முடித்து அவரிடம் காட்டினோம். படத்தை பார்த்துவிட்டு மகிழ்ச்சியாகப் பாராட்டியவர், இது எனக்கான படம், எனக்கான வேலைகள் இதில் நிறைய இருக்கிறது என உடனே இசையமைக்கவும் ஒப்புக்கொண்டார்.

மேலும் இந்தப்படத்திற்காகத் தனி ஈடுபாடு காட்டி, மூன்று பாடல்களுக்கும் சிறப்பாக இசையமைத்துள்ளார். அதுமட்டுமல்ல படத்தின்பால் ஈர்க்கப்பட்டு அவரே ஒரு பாடலையும் எழுதியிருக்கிறார்.

இன்னொரு முக்கியமான விஷயம், இதை சின்ன படம் என்று அவர் ஒதுக்கவும் இல்லை.. இவ்வளவு தொகை எனக்கு வேண்டும் என எந்த இடத்திலும் அவர் கேட்கவும் இல்லை.

இளையராஜாவின் இசையில் இந்தப்படம் புது வடிவம் பெற்றுள்ளது என்றே சொல்லலாம். படத்தை பார்த்துவிட்டு ஒரு மூத்த பத்திரிகையாளர், “இது படம் என்பதையும் தாண்டி, ஒரு வாழ்வியல் பதிவு’ என பாராட்டினார்.. இரண்டு வருடம் கஷ்டப்பட்டதற்கான வெகுமதி தான் அவரது பாராட்டு.

படத்தின் இயக்குனர் அத்வைதனுக்கு இது முதல் படம் தான். இப்படி ஒரு கதையை அவர் சொன்னதுமே இப்படத்தை எடுத்தே தீரவேண்டும் என்கிற எண்ணத்தை எனக்குள் ஏற்படுத்திவிட்டார். படம் எடுத்த அனுபவம் இன்னும் பல நல்ல கதையம்சங்கள் கொண்ட படங்களைத் தயாரிக்கவேண்டும் என்கிற ஆசையையும் உத்வேகத்தையும் எனக்கு ஏற்படுத்தியுள்ளது.

“’களத்தூர் கிராமம்’ படத்தை செப்-15ஆம் தேதி ரிலீஸ் செய்வதாக இருந்தநிலையில் நாங்கள் எதிர்பார்த்த அளவிற்கு போதுமான எண்ணிகையில் தியேட்டர்கள் கிடைக்கவில்லை.. அந்த சூழ்நிலையில் நாங்கள் படத்தை வெளியிட்டிருந்தால் மிகுந்த பொருளாதார பின்னடைவை சந்தித்திருப்போம். படமும் மக்களின் பார்வைக்கு சரியாக சென்று சேர்ந்திருக்காது.

ஒரு நல்ல படத்தை தயாரித்துள்ளோம் என்கிற திருப்தி எங்களுக்கு இருக்கிறது.. எங்களது இரண்டு வருட கடின உழைப்பு இந்தப்​ ​படம். அதனால் படத்தை மக்களிடம் கொண்டு செல்வதற்காக கொஞ்சம் காத்திருந்தாலும் பரவாயில்லை என முடிவு செய்து, தற்போது அக்-6ஆம் தேதி ரிலீஸ் செய்கிறோம்..

நாங்கள் எதிர்பார்த்த அளவிற்கு போதுமான தியேட்டர்கள் கிடைத்திருக்கிறது.

செப்-15லேயே ரிலீஸ் செய்ய முயற்சி எடுத்தபோது உறுதுணையாக இருந்த அனைவருக்கும், தற்போது அக்-6ல் ரிலீஸ் செய்ய உதவியவர்களுக்கும், படத்தை பார்த்துவிட்டு பாராட்டிய பத்திரிகையாளர்களுக்கும் எங்களது நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்” என கூறினார் தயாரிப்பாளர் A.R சீனுராஜ்
​. ஆர் பி எம் சினிமாஸ் சார்பாக ​ராகுல் வெளியிடுகிறார்.