எந்த நேரத்திலும் விமர்சனம்

சுயநலத்தோடு நாம் செய்கிற எந்த ஒரு தீங்குங்கும் பின்னாலில் எந்த நேரத்திலும் தக்க தண்டனை கிடைக்கலாம் என்பது தான் இந்தப் பட டைட்டிலில் இருக்கிற செய்தி.

படமும் அப்படித்தான். ஊட்டியில் வசிக்கும் இளமை பொங்கி வழியும் மாணவியான லீமா பாபுவை ‘ஷட்டில் காக்’ விளையாடும் போது துரத்தி துரத்தி காதலிக்கிறார் நாயகன் ராமகிருஷ்ணன்.

அவருடைய காதலுக்கு லீமாவும் க்ரீன் சிக்னல் கொடுக்க தன் காதலியை அக்கா சாண்ட்ரா எமி, அவரது கணவர் யஷ்மித், அப்பா கிருஷ்ணன் ஆகியோருக்கு அறிமுகப்படுத்தி வைக்க வீட்டுக்கு கூட்டிச் செல்கிறார்.

லீமாவைப் பார்த்ததும் மூன்று பேரும் அதிர்ச்சியடைகிறார்கள். அதோடு அவரைப் பற்றிய யோசனையிலேயே கார் ஓட்டிச் செல்கிற போது எமியின் கணவரும், அவரது அப்பாவும் விபத்தில் இறந்து விடுகிறார்கள்.

இதனால் அந்த வீட்டிலிருந்து வெளியேறி கோத்தகிரியில் இருக்கிற பூர்வீக வீட்டுக்கு ராமகிருஷ்ணன், சாண்ட்ரா மற்றும் அவரது குழந்தையும் செல்கிறார்கள். அங்கு போன உடனே லீமா உருவத்திலேயே இருக்கிற ஒரு ஆவி சாண்ட்ராவின் குழந்தை மீது புகுந்து கொண்டு அவரை கொலை செய்ய முயற்சிக்கிறது.

லீமா உருவத்தில் இருக்கும் அந்த ஆவி ஏன் சாண்ட்ராவை கொலை செய்ய முயற்சிக்கிறது? என்பதே கிளைமாக்ஸ்.

நாயகனாக வரும் ராமகிருஷ்ணனுக்கு பெரிதாக படத்தில் வேலை இல்லை. லீமாவைக் காதலிக்கிறார். டூயட் பாடுகிறார். நடிப்புக்கான ஸ்கோப் என்பது குறைவு தான்.

ரொமான்ஸ் காட்சிகளில் ரொம்பவே யதார்த்தம் காட்டியிருக்கும் லீமா பாபு பேயாக வரும் காட்சிகளில் பழைய படங்களில் வருகிற பேய் மேக்கப்போடு வந்து பயமுறுத்துவதில் பயமில்லை.

படத்தின் கதை முழுக்க முழுக்க சாண்ட்ரா எமியை மட்டுமே சுற்றி வருவதால் அவருக்கு நடிக்க நிறைய ஸ்கோப் இருக்கிறது. அவரும் அந்த வாய்ப்பை பயன்படுத்தி முடிந்த அளவுக்கு கேரக்டருக்கு உயிர் கொடுத்திருக்கிறார். சிறிய கேரக்டராக இருந்தாலும் சரியாகப் பொருந்தியிருக்கிறார் யஷ்மித்.

காமெடிக்கு சிங்கம் புலியை இறக்கி விட்டிருந்தாலும் மனசு விட்டுச் சிரிக்க ஒரு காட்சியும் இல்லை என்பதே உண்மை.

ஊட்டி மற்றும் அதைச் சுற்றியுள்ள பச்சைப் பசேல் போர்த்திய பகுதிகளின் அழகை நம் கண்முன்னே கொண்டு வந்திருக்கிறார். பி.சதீஷின் இசையில் பாடல்களை விட சபேஷ் முரளியின் பின்னணி இசை படத்துக்கு பக்கபலம்.

ஒரே மாதிரி உருவத்தில் இருக்கிற இரண்டு பேரை வைத்து வழக்கமான பேய்ப்படமாக இல்லாமல் வித்தியாசம் காட்ட முயற்சித்திருக்கிறார் இயக்குநர் முத்துக்குமார். அதற்கான ஆவிகள் பயமுறுத்தும் கிராபிக்ஸ் காட்சிகளை தொழில்நுட்ப ரீதியாக இன்னும் கொஞ்சம் மெறுகேற்றியிருந்தால் படம் உண்மையிலேயே ரசிகர்களை மிரட்டியிருக்கும்.