பெற்றோர்களுக்கு சமூக ஊடகங்கள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் படம் ‘ஏன் இந்த மயக்கம் ‘

பெற்றோர்களுக்கு சமூக ஊடகங்கள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் படமாக ‘ஏன் இந்த மயக்கம் ‘ உருவாகியிருக்கிறது.

இப்படத்தை ஒயிட் ஸ்க்ரீன் எண்டர்டெய்ன்மெண்ட்ஸ் சார்பில் எம்.அந்தோணி எட்வர்ட் தயாரித்துள்ளார்.

ஷக்தி வசந்த பிரபு இயக்கியுள்ளார். இவர் பிரபுதேவாவிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர்.

முற்றிலும் புதுமுக நடிகர்களின் பங்கேற்பில் இப்படம் எடுக்கப் பட்டுள்ளது.

படம் பற்றி இயக்குநர் ஷக்தி வசந்த பிரபு பேசும் போது ,

“இன்று உலகம் சுருங்கி விட்டது. உள்ளங்கையில் உலகத் தொடர்பு சாத்தியமாகியுள்ளது. இதனால் பல நன்மைகள் மட்டுமல்ல தீமைகளும் விளைகின்றன. படிக்கிற வயதில் பிள்ளைகள்
சமூக ஊடகங்களின் மயக்கத்தில் மூழ்கி தங்கள் நேரத்தை விரயமாக்குவதுடன் தகாத செயல்களில் இறங்கி தங்கள் எதிர்காலத்தையே தொலைத்து விடுகிற விபரீதமும் நடக்கிறது. அப்படிப்பட்ட விபரீதங்கள் பற்றி எடுத்துச் சொல்லி பெற்றோர்களை எச்சரிக்கிற ஒரு படமாகத்தான் இந்த ‘ஏன் இந்த மயக்கம்’ படம் உருவாகியுள்ளது” என்கிறார் இயக்குநர்.

” வீட்டுக்குள் உட்கார்ந்து கொண்டு என்ன தப்பு செய்தாலும் வெளியே தெரியாது என்கிற எண்ணம் உள்ளது. இது மிகவும் தவறானது மட்டுமல்ல ஆபத்தானதும் கூட என்று எச்சரிக்கிற படம். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் சமூக ஊடகங்களில் என்னென்ன செயல்பாடுகளில் இருக்கிறார்கள் என்று ஒவ் வொரு பெற்றோரும் விழிப்புணர்வோடு எச்சரிக்கை உணர்வும் பெற வேண்டும் என்கிற நோக்கில் படம் உருவாகியுள்ளது.” என்கிறார் இயக்குநர்.

சென்னை , பாண்டிச்சேரி , ஏற்காடு பகுதிகளில் படப்பிடிப்பு நடந்துள்ளது. முழு நீள பரபரப்பான சஸ்பென்ஸ் த்ரில்லராக படம் உருவாகியுள்ளது.

நாயகி டெல்லா, “மானாட மயிலாட” வின்னர் சொர்ணா , கிருஷ்ணா என பல புதுமுகங்கள் நடித்துள்ளனர்.

படத்துக்கு ஒளிப்பதிவு கே.பி.வேல் , இசை சித்தார்த் பாபு , பாடல்கள் – ஏகாதசி , கருணா , த்ரேதா ரோஹினி ,எடிட்டிங் _ பீட்டர் பாபியா , ஆர்ட்- ராகுல் , நடனம் விமல் , ஸ்டண்ட் மாஸ்டர் மகேஷ் என உற்சாகமான திறமைக் கரங்கள் இணைந்து உருவாக்கியுள்ள இப்படம் ஜூலை 21-ல் வெளியாகவுள்ளது.

அறிவியலின் அற்புதமாக வந்துள்ள சக்தி வாய்ந்த சமூக ஊடகங்கள் பற்றி போதிய விழிப்பின்றி சிலர் செய்யும் சமூக விரோதச் செயல்களை விமர்சிக்கும் இப்படம் சமூக ஊடகங்களின் ஆதரவை மட்டுமே நம்பி வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.