Lens Movie Review

அதிக சம்பளத்தில் நல்ல வேலையில் இருக்கும் அரவிந்த், சபலப் பேர்வழி. இணையத்தில் ஆபாசப் படங்கள் பார்ப்பது, பதிவேற்றுவது, பெண்களுடன் ஸ்கைப்பில் சாட்டிங் எல்லாம் ஒரு மனநோய் போல் அவருக்குள் ஊடுருவி இருக்கிறது. ஜூலி என்ற பெண்ணுடன் ஸ்கைப்பில் அந்தரங்கமாக உரையாடுகிறார். ஆரம்பதில் முகமூடி அணிந்து பேசும் அவர்கள், தாங்கள் அணிந்திருக்கும் முகமூடியைக் கழற்றி நேரடியாகப் பேச முடிவு செய்கிறார்கள். அரவிந்த் தன் முகமூடியைக் கழற்றி முகம் காட்டுகிறான். ஜூலி முகமூடி கழற்றும்போது, அது பெண்ணல்ல, ஆண் என்பது தெரிகிறது. பெயர் யோகன்.

ஆரவிந்த் மோகத்துடன் பேசுவது உள்பட அனைத்தையும் பதிவு செய்து வைத்திருக்கும் யோகன், தான் தற்கொலை செய்யப்போவதாகவும், அதை நேரடியாக நீ ஸ்கைப்பில் பார்க்க வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கிறான், இப்படி மெல்ல மெல்ல அரவிந்த், யோகன் பிடிக்குள் சிக்குகிறான். யோகன் யார்? அவனுக்கும், அரவிந்துக்கும் என்ன சம்பந்தம் என்பது படத்தின் மீதிக்கதை

நிதானம், கோபம், சோகம், மகிழ்ச்சி, வெறி என பல்வேறு உணர்வுகளைக் கொட்டி, யோகனாக நடித்திருக்கிறார் ஆனந்த்சாமி. சில காட்சிகளே வந்தாலும், மனதில் ஆசனம் போட்டு அமர்ந்துகொள்கிறார், யோகன் மனைவியாக வரும் அஸ்வதி லால். ‘தினந்தினமும் ஆயிரக்கணக்கான பேர் என்னை கண்களாலேயே கற்பழிக்கிறார்கள்’ என்று அவர் எழுதிக்காட்டும்போது, கண்ணீர் கட்டுப்பட மறுக்கிறது. ‘நாளை இந்த வீடியோவை என் குழந்தையும் பார்க்கும்’ என்கிறபோது, எதிர்காலம் குறித்த பயத்தை உண்டாக்குகிறது.

மிஷா கோஷல், கொடுத்த கேரக்டரை நன்றாகச் செய்திருக்கிறார். கொஞ்சமும் லாஜிக் மிஸ் ஆகாமல், ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர் படத்துக்கான திகிலோடு வேகம் எடுக்கிறது திரைக்கதை. விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிலான கேரக்டர்கள், இரண்டு அறையில் நடக்கும் ஸ்கைப் உரையாடல் இவற்றை வைத்துக்கொண்டு, ஒரு பரபரப்பான படத்தைக் கொடுத்து, சமூகத்துக்கு நல்ல கருத்தையும் விதைத்த வகையில், கவனம் ஈர்க்கிறார் ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணன். லென்ஸ், இணையதள சுதந்திரத்தின் ஆபத்தை படம் பிடித்திருக்கிறது.