ருத்ரா கதாபாத்திரம் மூலம் தமிழ் திரையுலகில் அடியெடுத்து வைப்பது எனக்கு மகிழ்ச்சி – அனுராக் காஷ்யப்

நயன்தாரா – அதர்வா மற்றும் ராஷி கண்ணா நடித்து வரும் ‘இமைக்கா நொடிகள்’ படத்தில் வில்லனாக நடித்து வருகிறார், தன்னுடைய திரைப்படங்களால் உலகையே திரும்பி பார்க்க வைத்த இயக்குநர் அனுராக் காஷ்யப். இயக்குநர் வெற்றி மாறனோடு நெருங்கிய நட்புறவில் இருக்கும் இவருக்கு தமிழ் படங்கள் மீது எப்போதும் ஈர்ப்பு அதிகம். இருந்தாலும் அனுராக் காஷ்யப் முதல் முதலாக பணியாற்றும் முதல் தமிழ் திரைப்படம் ‘இமைக்கா நொடிகள்’ தான் என்பது குறிப்பிடத்தக்கது.

‘கேமியோ பிலிம்ஸ்’ சார்பில் சி ஜே ஜெயக்குமார் தயாரித்து வரும் ‘இமைக்கா நொடிகள்’ படத்தை, ‘டிமான்டி காலனி’ புகழ் அஜய் ஞானமுத்து இயக்கி வருகிறார். ஒளிப்பதிவாளராக ஆர் டி ராஜசேகர் மற்றும் இசையமைப்பாளராக ‘ஹிப் ஹாப் தமிழா’ பணியாற்றுகின்றனர். இந்த படத்தின் மிக முக்கியமான காட்சிகள் அனைத்தும் முன்னணி நடிகர்களோடு பெங்களூர் மற்றும் சென்னையில் படமாக்கப்பட்டிருக்கிறது. மேற்கொண்டு, வரும் மாதங்களில் நாங்கள் சென்னையிலும், இந்தியாவில் இருக்கும் மற்ற இடங்களிலும் எங்கள் படப்பிடிப்பை தொடர இருக்கின்றோம்.

“இமைக்கா நொடிகள் படத்தில் நான் நடிப்பதற்கு முக்கிய காரணம், என்னுடைய ருத்ரா கதாபாத்திரம் தான். வழக்கமாக இருக்கும் வில்லன்கள் போல் குடி, சிகரெட், அடியாட்களை ஏவிவிடுவது என்று இல்லாமல், புத்திசாலித்தனமாகவும் அதே நேரத்தில் தந்திரமாகவும் செயல்படக்கூடிய ஒரு மிரட்டலான வில்லன் தான் இந்த ருத்ரா. மும்பையில் நான் என்னுடைய பிற வேலைகளில் கவனம் செலுத்தி வந்தாலும், இந்த வித்தியாசமான குணாதியசங்களை கொண்ட ருத்ரா கதாபாத்திரம் என்னை ‘இமைக்கா நொடிகள்’ படத்திற்குள் அழைத்து வந்துவிட்டது. இந்த படத்தை பார்க்க வரும் ரசிகர்களின் சிறிய அளவு பயத்தை என்னுடைய ருத்ரா கதாபாத்திரம் வெளி கொண்டு வந்து விட்டால், நான் செய்த பணி முழுமை பெற்று இருக்கிறது என்பதை உணர்ந்து கொள்வேன்.

இளைஞர்கள் இது போன்ற சுவாரசியமான கதையம்சங்களை கொண்டு படம் எடுப்பதை பார்க்கும் பொழுது மகிழ்ச்சியாக இருக்கின்றது. இத்தகைய வலுவான கதையம்சம் கொண்ட படத்தை இயக்குவதற்கு நிச்சயமாக அதிக அனுபவம் தேவை. ஆனால் அஜய் ஞானமுத்து அந்த பணியை கன கச்சிதமாக செய்து வருவதை பார்க்கும் பொழுது எனக்கு வியப்பாக இருக்கின்றது. ஒளிப்பதிவாளர் ஆர் டி ராஜசேகர் என்னுடைய நண்பர். அவருடன் நான் ஏற்கனவே ஏ ஆர் முருகதாஸின் ‘அகிரா’ படத்தில் பணியாற்றி இருக்கின்றேன். நிச்சயமாக அவருடைய எழில் மிகு காட்சிகள் ஒவ்வொன்றும், ரசிகர்களின் உள்ளங்களை கொள்ளை அடித்து செல்லும். நடிகர் – நடிகைகள், தொழில் நுட்ப கலைஞர்கள் மற்றும் ஒட்டு மொத்த படக்குழுவினரின் தேவையகளையும் முழுவதுமாக பூர்த்தி செய்து, அனைவருக்கும் உறுதுணையாய் செயல்பட்டு கொண்டிருக்கின்றனர், இந்த படத்தின் தயாரிப்பு துறையினர். என்னை நானே திரையில் பார்க்க மிகவும் ஆர்வமாக காத்து கொண்டிருக்கின்றேன்” என்று உற்சாகமாக கூறுகிறார் அனுராக்.

மூன்று கட்ட படப்பிடிப்பை நிறைவு செய்து, தற்போது மேலும் இரண்டு கட்ட படப்பிடிப்பை தொடர்ந்து கொண்டிருக்கும் ‘இமைக்கா நொடிகள்’ படத்தின் படக்குழுவினர், வருகின்ற ஏப்ரல் மாதத்தில் படப்பிடிப்பை முழுவதுமாக நிறைவு செய்ய உள்ளனர்