ஊட்டச்சத்து மற்றும் விளையாட்டு – இவை இரண்டையும் மையமாக கொண்டு உருவாகும் குறும்படத்தில் சத்யராஜ் மகள்

விளையாட்டின் முக்கியத்துவத்தையும், ஊட்டச்சத்து உள்ள உணவு பழக்கங்களை மேற்கொள்வதால்  உண்டாகும் பயன்களை பற்றியும் ஒரு குறும்படம் உருவாக இருக்கின்றது. மக்களிடம் விளையாட்டு மற்றும் ஊட்டச்சத்து பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்தில்,  ஊட்டச்சத்து நிபுணர் திவ்யா சத்யராஜ், இந்த குறும்படத்தில் நடிக்க இருக்கிறார். இவரோடு இணைந்து, பல முன்னணி கிரிக்கெட் – டென்னிஸ் வீரர்களும் இந்த குறும்படத்தில் நடிக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.
“உடற்பயிற்சி என்பது வேறு, கட்டுப்பாடான உணவு பழக்க வழக்கங்களை கடைப்பிடிப்பது என்பது வேறு. ஆனால் என்னிடம் ஆலோசனை கேட்டு வரும் சிலர், உணவு கட்டுப்பாட்டை மேற்கொண்டால்  உடற் பயிற்சி  செய்ய தேவை இல்லை எனவும், உடற்பயிற்சி  செய்தால் உணவு கட்டுப்பாட்டை கடைப்பிடிக்க  தேவை இல்லை என்கின்ற மன நிலையிலும் தான் இருக்கின்றனர். உடற்பயிற்சி என்பது நம் அன்றாட வாழ்க்கையில் தவிர்க்க கூடாத ஒன்று.
என்னதான் ‘டிரட் மில்’ போன்ற  அதி நவீன உடற்பயிற்சி கருவிகளை பயன்படுத்தி  உடற்பயிற்சி செய்தாலும், பெரும்பாலானோருக்கு அதில் தொடர்ந்து நாட்டம் இல்லாமல் போய்விடுகிறது. அதற்கு காரணம்,  ‘கலோரி’ குறைந்து விட்டதா என்ற பயந்து பயந்து பயிற்சி மேற்கொள்வது தான். ஆனால் விளையாட்டு என்பது அப்படியில்லை. நம்முடைய முழு கவனத்தையும் விளையாட்டில் செலுத்தும் போது, நம் உடலில் இருக்கும்  ‘கலோரிகள்’ தாமாகவே குறைந்துவிடும்.  மன அழுத்தத்தை போக்கும் மருந்தாக  செயல்படுவது மட்டுமன்றி, சிறந்த ஒரு உடற்பயிற்சியாகவும் விளையாட்டு கருதப்படுகிறது.” என்று கூறுகிறார் திவ்யா சத்யராஜ்.
விளையாட்டு, உடல் ஆரோக்கியம், ஊட்டச்சத்தான உணவு என வலுவான சிறப்பம்சங்களை கொண்டு உருவாக இருப்பது தான்  இந்த குறும்படம். மும்பை நகரில் உள்ள ஒரு பெரு நிறுவனம் தயாரித்து, பெங்களூரை சார்ந்த  விளம்பர பட இயக்குநர் வினீத் ராஜன் இயக்க இருக்கும் இந்த குறும்படத்தில், ஒளிப்பதிவாளராக பணியாற்றுகிறார் சாஷா.

Related posts