ஆழ் மனத்தைத் தட்டி எழுப்புங்கள் எல்லாம் முடியும் : ஜாக்குவார் தங்கம் பேச்சு!

ஆழ் மனத்தைத் தட்டி எழுப்புங்கள் எல்லாம் முடியும் என்று பிரபல திரைப்பட ஸ்டண்ட் மாஸ்டரும் தயாரிப்பாளர் சங்கம் ( கில்டு) செயலாளருமான  ஜாக்குவார் தங்கம் ஒரு விழாவில் பேசினார்.
திரைப்படங்களில் ஸ்டண்ட் அமைத்து அதிரடி பிம்பமுள்ள அவர் ஆன்மிகம் , தன்னம்பிக்கை பற்றிப் பேசியது வந்திருந்தவர்களை வியப்பில் ஆழ்த்தியது. இது பற்றிய விவரம் வருமாறு:
குறும்பட இயக்குநரும் எழுத்தாளருமான ஜி.எஸ்.குமாரதேவி எழுதிய ‘காற்றடைத்த பையடா’ நூல் வெளியீட்டு விழா கடந்த டிசம்பர் 31 அன்று  காலை பிரசாத் லேப் 70 எம்எம் திரையரங்கில் நடைபெற்றது.. ஜாக்குவார் தங்கம் நூலை வெளியிட்டார். வனிதா பதிப்பகம் வெளியிட்டுள்ள இந்த நூலை இளைஞர்கள் பலரும்  பெற்றுக் கொண்டனர். நூலை வெளியிட்டு  அவர் பேசும் போது “நான் இந்த நாவலை வாசித்தேன் .அதில் கெட்டவை எதுவும் இல்லை . நேர்மை. புதுமை, உண்மை. இருக்கிறது. இதற்காகவே  அவரைப் பாராட்டுகிறேன். சகோதரி குமாரதேவி ஊடகத்துறையில்  25 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். உடல் பலத்தை விட மனபலம் உள்ளவர்.மனபலம் இருந்தால் சாதிக்க முடியும்.மனம் பாதை மாறினால் கேடுகள் வரும்.
இன்று நடக்கும் எல்லா கெட்ட காரியங்களுக்கும் பேய் மனமே காரணம் .இதைப் போக்க என்ன செய்வது? நாம் யோகாசனம் கற்றுக் கொண்டால் மேன்மை அடையலாம். நம் ஆழ்மனத்தை தட்டி எழுப்பினால் எல்லாவற்றையும் சாதிக்க முடியும். ஆழ்மனம் விழித்தால் எல்லாம் முடியும்.
என் 5 வயதில் அம்மா காலமானார். 6 வயதில் அப்பா காலமானார் .அப்படிப்பட்ட சூழலில் இருந்த நான் படிக்க முடியவில்லை. ஆனால் சிறு வயதிலேயே யோகா , சிலம்பம்.ஜூடோ, வர்மம் என்று ஒன்று விடாமல் கற்றுக் கொண்டேன். நான் இதுவரை 1007 படங்களில்  ஸ்டண்ட் மாஸ்டராகப் பணியாற்றி இருக்கிறேன்.இந்த 64 வயதில் ஆரோக்கியமாக இளமையாக இருக்கிறேன். காரணம் இத்தனை ஆண்டுகளாக மது , மாது, புகை போன்ற எந்த கெட்ட பழக்கமும் கிடையாது. வெற்றிலை பாக்கு இல்லை. ஒரு டீ கூட குடித்தது இல்லை .
நான் இதுவரை 21 ஆயிரம் பேருக்கு யோகா சொல்லிக் கொடுத்து இருக்கிறேன். விஜயகாந்த், சரத்குமார், விஜயசாந்தி, ரம்பா, சினேகா வரை பலருக்கும் சொல்லிக் கொடுத்து இருக்கிறேன்.
நான் இப்போது மீண்டும் சொல்கிறேன் ஆழ் மனத்தைத் தட்டி எழுப்புங்கள் எதுவும் நம்மால் முடியும்.நான் இரவு 2 மணிக்குக் கூட தியானம் செய்வேன்.
இன்று டிசம்பர் 31 இது தான் கடைசி நாள் என்றார்கள். எதுவும் கடைசி நாளில்லை. எல்லா நாளும் முதல் நாள் தான். நாம் இறக்கும் நாள் தான் கடைசி நாள்.
சாப்பிடும் போது சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடுங்கள். பொறுமையாக மென்று சாப்பிடுங்கள் அப்போதுதான் உமிழ்நீரால் உண்டது செரிக்கும்.  ஷவரில் குளிக்காதீர்கள் . கால் முதல் தலைக்கு படிப்படியாக தண்ணீரை ஊற்றிக் குளியுங்கள். மகிழ்ச்சியாக இருங்கள். மற்றவர்களைப் பாராட்டுங்கள். இதையே தொடர்ந்து செய்தால் ஆரோக்கி்யம் பெருகும்.மீண்டும் நூலை எழுதியுள்ள குமாரதேவியை பாராட்டுகிறேன்.வாழ்த்துகிறேன்.” இவ்வாறு ஜாக்குவார் தங்கம் பேசினார்.
நிகழ்ச்சியில் அகில இந்திய எழுத்தாளர் சங்கத் தலைவர் பெரியண்ணன், தினமலர்  பத்திரிகையின் மூத்த நிருபர் சக்கரபாணி, திரைப்பட இயக்குநர்கள் ‘அய்யனார்’ ராஜமித்ரன் , ஜி.கே.லோகநாதன், திருக்குறள் பேரவைத் தலைவர் பார்த்தசாரதி ஆகியோரும் கலந்து கொண்டனர்.
நங்கைநல்லூர் மகளிர் மன்ற உறுப்பினர்கள் பலரும் நிகழ்ச்சிக்கு வருகை தந்திருந்தனர். ஒளிப்பதிவாளர் வி.சக்திவேல் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.
நிறைவாக எழுத்தாளர் ஜி.எஸ்.குமாரதேவி ஏற்புரை வழங்கினார்.