பைரவா இசை வெளியீடு பற்றி தயாரிப்பாளர் பி.வெங்கட்ராம ரெட்டி பேட்டி

பாதாள பைரவி, மாயாபஜார், மிஸ்ஸியம்மா, எம்.ஜி.ஆர் நடித்த – எங்கவீட்டு பிள்ளை, நம்நாடு, ரஜினிகாந்த் நடித்த உழைப்பாளி, கமலஹாசன் நடித்த நம்மவர் மற்றும் தாமிரபரணி, படிக்காதவன், வேங்கை, வீரம் உட்பட 60க்கும் மேற்பட்ட வெற்றிப்படங்களை தயாரித்த பழம்பெரும் பட நிறுவனம் பி.நாகிரெட்டியாரின் விஜயா புரொடக்ஷன்ஸ்.
பி.நாகிரெட்டியாரின் நல்லாசியுடன் பி.வெங்கட்ராம ரெட்டி வழங்க, விஜயா புரொடக்ஷன்ஸ் சார்பில்  பி.பாரதி ரெட்டி, இளைய தளபதி விஜய் நடிக்கும் பைரவா படத்தை ஏராளமான பொருட்செலவில் மிகவும் பிரம்மாண்டமானமுறையில் தயாரித்து வருகிறார்.
கதை, திரைக்கதை, வசனம், எழுதி – பரதன் இயக்கும் பைரவா படத்துக்கு, கவிப்பேரரசு வைரமுத்து தன் வைர வரிகளால் பாடல்கள் எழுதியுள்ளார்.
இப்படத்தில் இளைய தளபதி விஜய் கதாநாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார்.
இவர்களுடன் ஜெகபதிபாபு, சதீஷ், ஒய்.ஜி.மகேந்திரன், தம்பி ராமைய்யா, டேனியல் பாலாஜி, மைம் கோபி, ‘ஆடுகளம்’ நரேன், ஸ்ரீமன் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.
இப்படத்திற்காக சென்னை பிரசாத் ஸ்டுடியோவில் கோயம்பேடு போன்று பல லட்சம் பொருட்செலவில், 200க்கும் மேற்பட்ட பேருந்துகள், 300க்கும் மேற்பட்ட கடைகள், 1000க்கும் மேற்பட்ட துணை நடிகர் நடிகைகளை கொண்டு ஒரு நிஜ பஸ் நிலையத்தையே கண்முன்னே கொண்டு வந்ததுபோல் செட் அமைத்து, அதில் 12 நாட்களுக்கும் மேலாக இளைய தளபதி விஜய்யை வைத்து படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது…
அதே போல் சென்னை பின்னிமில்லில் மிக பிரமாண்டமான பைரவர் கோயில் போன்றதொரு மிகப்பெரிய அரங்கம் ஒன்றை அமைத்து படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது.
மற்றும் இளைய தளபதி விஜய், கீர்த்தி சுரேஷ் நடித்த பாடல்காட்சி எழில் கொஞ்சும் சுவிட்சர்லாந்தில் படமாக்கப்பட்டுள்ளது.
பதைபதைக்க வைக்கும் 12 மாடி Under construction  கட்டிடத்தில் இளைய தளபதி சண்டைக் காட்சியில் அசத்தி உள்ளார்.
ஒளிப்பதிவு – எம் .சுகுமார், எடிட்டிங் – பிரவின் கே.எல்., கலை இயக்குநர் – எம்.பிரபாகரன், நடனம் – தினேஷ், சண்டைப்பயிற்சி – அனல் அரசு, நிர்வாகத் தயாரிப்பு – ஏ.ரவிச்சந்திரன், எம்.குமரன்.
சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள பைரவா படத்தின் இசை வெளியீட்டுவிழாவை மிகச் சிறப்பானமுறையில் படுவிமரிசையாக வெளியிட வேண்டும் என்ற எண்ணத்தில் விஜயா புரடக்ஷன்ஸ் நிறுவனம் தீவிரமாய் திட்டமிட்டு செயலாற்றி வந்த நிலையில், தற்போது பைரவா இசைவெளியீட்டு விழா கைவிடப்பட்டுள்ளது.
இது பற்றி பைரவா படத்தின் தயாரிப்பாளர்கள் பி.வெங்கட்ராம ரெட்டி மற்றும் பி.பாரதி ரெட்டி சொல்கிறார்கள்…
”பைரவா  இசைவெளியீட்டு விழாவை படு விமரிசையாக நடத்த எண்ணியிருந்தோம்.
இந்நிலையில் தமிழக முதல்வர் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் எதிர்பாராத இழப்பால்  இவ்விழா கைவிடப்பட்டுள்ளது.
காரணம், எங்களுடைய விஜயா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் நம்நாடு திரைப்படத்தில் அம்மா அவர்கள் நடித்தார்கள்.
அதோடு மட்டுமல்லாமல், எங்களுடைய குடும்பத்தில் ஒருவராக அம்மா அவர்களை மதித்து வந்தோம். அவருடைய இழப்பின் காரணமாக பைரவா இசைவெளியீட்டு விழாவை ரத்து செய்துவிட்டோம்.
அதோடு, இளைய தளபதி விஜய் அவர்களும் மேற்கண்ட காரணத்திற்காக இசைவெளியீட்டை பிரமாண்ட விழாவாக நடத்த வேண்டாம் என கேட்டுக் கொண்டார். அதனால், எளிமையான முறையில் வரும் டிசம்பர் 23 ஆம் தேதி பாடல்களை உலகெங்கும் நேரடியாக வெளியிட திட்டமிட்டுள்ளோம்.”.