‘ஆவணிப் பூவரங்கு’ மூலம் சென்னையில் ‘திருச்சூர்’

அன்றும், இன்றும், என்றென்றும் நம் தமிழ் மக்களுக்கும், மலையாள மக்களும் இடையே  ஓர் வலுவான சகோதர உறவு நீடித்து வருகிறது. மொழி மற்றும் கலாச்சாரத்தால் நாம் வேறுபட்டு இருந்தாலும், அந்த சகோதர உறவால் நாம் ஒன்றுபட்டு தான் இருக்கிறோம். வருகின்ற அக்டோபர் 8 மற்றும் 9 ஆம் தேதி  ‘தமிழிக வாழ் மலையாள மக்களின் கூட்டமைப்பின்’  சார்பில் நடத்தப்பட இருக்கும் ‘ஆவணிப்பூவரங்கு’ திருவிழாவே அதற்கு சிறந்த உதாரணம். ஓணம் பண்டிகையை முன்னிட்டு நடத்தப்படும் இந்த திருவிழா, பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள பச்சையப்பன் கல்லூரி மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இந்த தகவலை நேற்று  ‘தமிழிக வாழ் மலையாள மக்களின் கூட்டமைப்பின்’ சார்பில் ஸ்ரீ எம் பி புருஷோத்தமன் (கௌரவ தலைவர் – CTMA ), ஸ்ரீ கோகுலம் கோபாலன் (நிறுவனர் –  CTMA), ஸ்ரீ எம் எ சலீம் (தலைவர் – CTMA), ஸ்ரீ வி சி பிரவீன் (நிறுவனர் – ஆவணிப் பூவரங்கு) மற்றும் டாக்டர் எ வி அனூப் (நிறுவனர் – JAC) ஆகியோரால் அறிவிக்கப்பட்டது. விமர்சையாக நடைபெற இருக்கும் இந்த ‘ஆவணிப் பூவரங்கு’ திருவிழாவில் பழம்பெரும் இயக்குனர் ஹரிஹரன், கே எஸ் சேதுராமன், இயக்குனர் ஐ வி சசி (அலாவுதீனும் அற்புத விளக்கும்), நடிகை சீமா, கலை இயக்குனர் சாபு சிரில், நடிகர் ஸ்ரீனிவாசன் என  திரையுலகை சார்ந்த பல முன்னணி கலைஞர்கள் கலந்து கொள்ள இருப்பது குறிப்பிடத்தக்கது.
18 ஆம்  ஆண்டில் அடியெடுத்து வைக்கும் ‘ஆவணிப் பூவரங்கு’ திருவிழாவானது, வெறும் கலை நிகழ்ச்சிகளோடு மற்றும் நின்று விடாமல், தமிழக – கேரள மக்களின் நலன்களுக்காகவும் பல திட்டங்களை அறிமுகபடுத்த இருப்பது மேலும் சிறப்பு. ‘இதுவரை நாங்கள் 180 இதய நோயாளி குழந்தைகளுக்கு இலவச இதய அறுவை சிகிச்சை நடத்தி இருக்கிறோம். அதில் தற்போது 179 குழந்தைகள் ஆரோக்கியமாகவும், இயல்பாகவும் இருப்பதை பார்க்கும் பொழுது எங்களுக்கு எல்லையற்ற மகிழ்ச்சியாக இருக்கின்றது. எங்கள் அமைப்பின் தூதராக செயல்பட்டு கொண்டிருக்கும் பத்மஸ்ரீ கமல் ஹாசன் சாருக்கு எங்களது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம். கலாச்சார பரிமாற்றங்களை தாண்டி, நம் இரு மாநில மக்களின் முன்னேற்றத்திற்கு ஏற்ற திட்டங்களை அறிமுக படுத்துவதே எங்களின் தலையாய கடமை…” என்று கூறினார் ‘ஆவணிப் பூவரங்கின்’ நிறுவனர்  வி சி பிரவீன்.
“நம் தமிழக – கேரள மக்களின் இடையே நிலவி வரும் சகோதர உறவை கொண்டாடும் தருணம் இது. இரு மாநிலங்களின் நட்புறவை மேம்படுத்தும் ஒரு திருவிழா தான் இந்த ஆவணிப் பூவரங்கு….” என்று கூறினார்  ‘தமிழிக வாழ் மலையாள மக்களின் கூட்டமைப்பின்’  நிறுவனரும், பிரபல திரைப்பட தயாரிப்பாளருமான (பழசி ராஜா, தூங்காவனம்) கோகுலம் கோபாலன்.