‘சர்வர் சுந்தரம்’ திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பிற்காக துபாய் சென்றுள்ளனர் சந்தானம் மற்றும் படக்குழுவினர்

காதல், நகைச்சுவை, செண்டிமெண்ட், அதிரடி, ஹீரோயிசம் என பல சிறப்பான குணங்கள் தான் ஒரு சிறந்த திரைப்படத்திற்கு அடையாளம்… அந்த குணங்களை எல்லாம் மிக யதார்த்தமாக திரையில் பிரதிபலிக்கும் ஒரு நடிகர் யார் என்றால், அவர் சந்தானம் என்று  கண்களை மூடிக்கொண்டு சொல்லலாம். ‘தில்லுக்கு துட்டு’ படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு, ஒரு கமர்ஷியல் ஹீரோவாக தன்னுடைய வெற்றி பயணத்தை ‘சர்வர் சுந்தரம்’ திரைப்படம் மூலம் தொடர இருக்கிறார் சந்தானம். தரமான திரைப்படங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து  ரசிகர்களுக்கு வழங்கி வரும் ‘கெனன்யா பிலிம்ஸ்’ – ஜெ செல்வக்குமார்  தயாரித்து வரும்  ‘சர்வர் சுந்தரம்’ படத்தை ஆனந்த் பல்கி இயக்கி வர, மராத்திய நடிகை வைபவி ஷந்திலியா முன்னணி கதாபாத்திரத்தில்  நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
சென்னை, கோவா மற்றும் தென்காசியில்  முக்கிய காட்சிகளை படமாக்கிய ‘சர்வர் சுந்தரம்’ படக்குழுவினர், தற்போது கிளைமாக்ஸ் படப்பிடிப்பிற்காக துபாயில் தரை இறங்கி இருக்கின்றனர். பன்னிரெண்டு நாட்கள் நடைபெறும் இந்த படப்பிடிப்பில், ஒரு பாடல், கிளைமாக்ஸ் மற்றும் ஒரு முக்கிய காட்சியானது படமாக்கப்பட இருக்கிறது. துபாய் விமான நிலையத்தில் தரையிறங்கிய ‘சர்வர் சுந்தரம்’ படக்குழுவினர், சந்தானத்திற்கு துபாய் ரசிகர்கள் கொடுத்த விமர்சையான வரவேற்பால் வியந்து போய் இருக்கின்றனர்… தமிழ் சினிமாவில் சந்தானத்தின் ரசிகர் பலத்தை பற்றி நன்கு அறிவோம், ஆனால் தற்போது துபாயில் கொடுக்கப்பட்ட இந்த பிரம்மாண்ட வரவேற்பானது, உலகளவில் உள்ள அவரது எண்ணற்ற ரசிகர்களை பற்றி உணர்த்தி இருக்கிறது.
இந்த இறுதிக்கட்ட படப்பிடிப்பிற்கு பிறகு ‘சர்வர் சுந்தரம்’ படத்தின் தொழில் நுட்ப பணிகள்  ஆரம்பமாக இருப்பது குறிப்பிடத்தக்கது…வெற்றிகரமான கமர்ஷியல் ஹீரோவாக வலம் வந்து கொண்டிருக்கும் சந்தானத்தின் ‘சர்வர் சுந்தரம்’ திரைப்படமானது, வர்த்தக உலகில் புதியதொரு சாதனையை படைக்கும் என பெரிதும் எதிர்பார்க்கப்டுகிறது.

Related posts