“சில சமயங்களில்’ – தமிழ் சினிமாவிற்கு ஓர் அர்ப்பணிப்பு…” என்கிறார் பிரகாஷ் ராஜ்

மிக யதார்த்தமான படைப்பாளிகளில் ஒருவராக கருதப்படும் இயக்குனர் பிரியதர்ஷனின் ‘சில சமயங்களில்’ , 74 வது ஆண்டு கோல்டன் குளோப் விருதின் இறுதிச் சுற்றுக்கு தேர்ந்தெடுக்க பட்டிருக்கிறது…  ஒட்டுமொத்த இந்திய திரை உலகினருக்கும் இது ஒரு மகத்தான தருணம்…’பிரபு தேவா ஸ்டுடியோஸ்’ மற்றும் ‘திங்க் பிக் ஸ்டுடியோஸ்’ சார்பில் டாக்டர் கணேஷ் மற்றும் இயக்குனர் விஜய் இருவரும் இணைந்து  தயாரித்து இருக்கும் ‘சில சமயங்களில்’ திரைப்படத்தில் பிரகாஷ் ராஜ், நாசர், ஸ்ரேயா ரெட்டி, அசோக் செல்வன் முன்னணி கதாபாத்திரங்களிலும், வருண் மற்றும் சண்முகராஜன் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்திருக்கின்றனர்.
பாடல் எதுவுமின்றி உருவாக்கப்பட்டிருக்கும் ‘சில சமயங்களில்’   23 நாட்களில் படமாக்கப்பட்டிருப்பது ஒரு சாதனையே… ‘இசைஞானி’ இளையராஜாவின் நெஞ்சை வருடும் பின்னணி  நிச்சயமாக ‘சில சமயங்களில்’ திரைப்படத்திற்கு பக்கபலமாய் விளங்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. எழில் மிகு காட்சிகளை யதார்த்தமாக படமாக்கும் ஒளிப்பதிவாளர் சமீர் தாஹிர், புகழ் பெற்ற கலை இயக்குனர் சாபு சிரில் மற்றும் படத்தொகுப்பாளர் பீனா பால் என பல சிறப்பான தொழில் நுட்ப கலைஞர்கள் ‘சில சமயங்களில்’ படத்தில் பணியாற்றி இருப்பது மேலும் சிறப்பு.
“ஞானமும், திறமையும் ஒருசேர பெற்ற ஒரு உன்னதமான படைப்பாளி, இயக்குனர் பிரியதர்ஷன். கோல்டன் குளோப் விருது மட்டுமின்றி,  அதற்கு மேல் இருக்கும் அனைத்து விருதுகளை பெறும் தகுதியும், திறமையும் பிரியதர்ஷனிற்கு  இருக்கிறது…உலக சினிமாவின் பார்வை தற்போது தமிழ் சினிமாவின் பக்கம் திரும்பியுள்ளது…அதற்கு காரணம் பிரியதர்ஷன்…. தமிழ் சினிமாவிற்காக  ‘சில சமயங்களில்’ திரைப்படத்தை அர்ப்பணிப்பதில் எல்லையற்ற மகிழ்ச்சி கொள்கிறோம்…” என்று உற்சாகமாக கூறுகிறார் பிரகாஷ் ராஜ்.
“திரைப்படம் உருவாக்குவதில் இரண்டு முறைகள் இருக்கிறது. ஒன்று, நம்முடைய திறமையை வெளிப்படுத்துவதற்காக திரைப்படத்தை உருவாக்குவது…. மற்றொன்று, நம் உள்ளத்தில் உதயமான கதையை நமக்காகவே உருவாக்குவது….’காஞ்சிவரம்’ படத்திற்கு பிறகு என் உள்ளத்தில் இருந்து இரண்டாவது முறையாக உருவானதே ‘சில சமயங்களில்’…என்று கூறினார் இயக்குனர் பிரியதர்ஷன்.

 

Related posts