ஹீரோயின் அம்மாவுக்கு ரூட் விடும் ரவிமரியா- ’பகிரி’ படத்தில் ரகளை

தமிழ் சினிமாவில் ஒரு பக்கம் ஹீரோக்கள் வில்லன்களாக வேஷம் கட்டி கலக்கிக்கொண்டிருக்க இன்னொரு பக்கம் வில்லன்கள் காமெடியன்களாகி மக்களை வயிறு குலுங்க வைத்து வருகிறார்கள். அதில் முக்கியமானவர் இயக்குனர் ரவிமரியா… ரவிமரியாவை பொறுத்தவரை பக்கம் பக்கமாக வசனம் பேச வேண்டியதில்லை. முக பாவனைகளாலும் உடல் மொழியாலுமே நம்மை சிரிக்க வைத்துவிடுவார். அவரிடம் பகிரி படத்தில் நடித்த அனுபவம் பற்றி பேசினோம்.

‘’பகிரி படத்தின் இயக்குனர் இசக்கி கார்வண்ணன் ஏற்கெனவே இரண்டு படங்களை தயாரித்தவர். ஒரு அனுபவம் வாய்ந்த இயக்குனராக படத்தை எழுதி இயக்கியிருக்கிறார். முக்கியமாக கலைஞர்களுக்கு முழு சுதந்திரம் கொடுத்து வேலை வாங்கினார்.

இதில் நான் எக்ஸ்பெக்டிங் கவுன்சிலராக நடித்திருக்கிறேன். அதாவது கவுன்சிலராவதற்காக காத்திருக்கும் கேரக்டர். எப்படியாவது அந்த வார்டு கவுன்சிலராகிவிட வேண்டும் என்று ஆசைப்படுவேன். ஆனால் அது இறுதிவரை நடக்காது. அதற்கான காரணத்தை படத்தில் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.

அது தவிர ஹீரோயினின் அம்மாவை சைட் அடிக்கும் கேரக்டர். ஹீரோயின்னா சைட் அடிக்கலாம். ஹீரோயின் அம்மாவா? என்று தயக்கத்துடன் தான் ஸ்பாட் போனேன். ஆனால் ஹீரோயின் அம்மாவாக ஹீரோயினுக்கு சமமான அழகான ஆர்ட்டிஸ்டை தேர்வு செய்திருந்தார் இயக்குனர். ஸ்பாட்டிலும் ஹீரோயினுக்கும் ஹீரோயின் அம்மாவுக்கும் யார் அதிக அழகு என்ற போட்டி நடக்கும். அதனாலேயே நான் படப்பிடிப்பு முடிந்தவுடன் நமக்கெதுக்கு வம்பு என்று வீட்டுக்கு கிளம்பிவிடுவேன்.

இந்த படத்தில் நான் வரும் காட்சிகள் எல்லாமே சிரிக்க வைக்கும். ஒரு பார் காட்சி எடுக்கும்போதே எல்லோரும் கைதட்டினார்கள்.

இந்த படத்துக்கு பகிரி என்று டைட்டில் வைத்தார் இயக்குனர். எங்கு படப்பிடிப்பு போனாலும் அங்கு வரும் புதிய மனிதர்களிடம் பகிரிக்கு விளக்கம் கேட்போம். எல்லோருமே முழிப்பார்கள். நம் தமிழ் மொழியின் நிலை இப்படித்தான் இருக்கிறது. பகிரி என்பதற்கு வாட்ஸ் அப் என்று அர்த்தம் என்பது படம் வந்தபின்பு எல்லோருமே அறிந்துகொள்வார்கள். தமிழ் சினிமாவில் இதுபோன்ற தூய தமிழ் வார்த்தைகள் அதிகம் பயன்படுத்தப்பட வேண்டும்’’.

ரவிமரியா சமீபகாலமாக நடிக்கும் படங்கள் எல்லாம் பெரிய வெற்றியை அடைகின்றன. அந்த வரிசையில் பகிரியும் இணையட்டும்.