‘தப்பு தண்டா’ திரைப்படம் மூலம் இயக்குனராகிறார் பாலு மகேந்திராவின் மாணவர் ஸ்ரீகாந்தன்

திரைப்படங்கள் வெளி வருவதற்கு முன்னதாகவே சில திரைப்படங்கள் மக்கள் மத்தியில் பெரும் ஆர்வத்தை உருவாக்கும். அதற்கு முக்கிய காரணம் அந்த படத்தின் தலைப்பு தான். அந்த வகையில் தற்போது அறிமுக இயக்குனர் ஸ்ரீகாந்தன் இயக்கி வரும் ‘தப்பு தண்டா’ திரைப்படம், அதன் வித்தியாசமான தலைப்பால் சினிமா பிரியர்களின் கவனத்தை வெகுவாக ஈர்க்க இருக்கிறது. ரசிகர்கள்  அதிகமாக விரும்பக் கூடிய அதிரடி மற்றும் நகைச்சுவையின் கலவையில் இந்த ‘தப்பு தண்டா’ திரைப்படம் உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது.
 
இந்திய சினிமா உலகில் கனவுகளை காட்சி படுத்தும் கலைஞர்களில் ஒருவராக போற்றப்படுபவர் இயக்குனர் – ஒளிப்பதிவாளர் பாலு மகேந்திரா. யதார்த்த சினிமாவை தமிழில் அறிமுகப்படுத்திய பெருமையும், புகழும் அவருக்கு உண்டு.  அவரின் பெயருக்கு மேலும் பெருமை சேர்க்கும் வண்ணமாக ‘தப்பு தண்டா’ திரைப்படம் மூலம் இயக்குனராக உருவெடுத்திருக்கிறார் பாலு மகேந்திராவின் ‘சினிமா பட்டறையில்’ பயின்ற ஸ்ரீகாந்தன்.  அவருடைய பள்ளியில் பயின்று, இயக்குனராக உருவாகியுள்ள முதல் மாணவர் ஸ்ரீகாந்தன் தான் என்பது குறிப்பிடத்தக்கது. தயாரிப்பாளர்கள் ராஜன் – சத்ய மூர்த்தி தயாரிக்கும் இந்த தப்பு தண்டா படத்தில் ஒளிப்பதிவாளராக A வினோத் பாரதி ஒளிப்பதிவாளராகவும், நரேன் பாலகுமார் இசையமைப்பாளராகவும் மற்றும் SP ராஜ சேதுபதி படத் தொகுப்பாளராகவும் பணியாற்றி வருகின்றனர்.
 
தப்பு தண்டா திரைப்படத்தின்  இயக்குனரான ஸ்ரீகாந்தனுக்கு, குறும்படங்களை கதை எழுதி இயக்குவது என்பது கை வந்த கலை. அவருடைய குறும்படங்களான ‘அஃசப்டன்ஸ்’ மற்றும் ‘கலர்ஸ்’, பல மதிப்பிற்குரிய விருதுகளை அவருக்கு பெற்று தந்திருக்கிறது. ” நான் இயக்கிய ‘ஐடன்டிட்டி’ என்னும் குறும்படம் தான் என்னை இயக்குனர் சிகரம் பாலு மகேந்திராவிடம் அழைத்து சென்றது. பாலு சார் எனக்கு அளித்த ஊக்கமும், நம்பிக்கையும் தான் என்னை  தப்பு தண்டா படத்தின் இயக்குனராக உருவாக்கி இருக்கிறது. பொதுவாகவே பாலு மகேந்திரா சாரின்  படம்  என்றால் யதார்த்தமாக  தான் இருக்கும் என்ற கருத்து மக்கள் மத்தியில் இருந்து வருகிறது. ஆயினும் பாலு சாரின் ‘சதி லீலாவதி’  மற்றும் ‘ரெட்டைவால் குருவி’ திரைப்படங்கள்  மக்களின் மனதில் என்றும் நீங்கா இடத்தை பிடித்திருக்கிறது. அந்த படங்களை இன்று பார்த்தால் கூட சிரிப்பிற்கு எந்த வகையிலும் பஞ்சம் இருக்காது. அவரின் அந்த வழியை தான் நான் பின் தொடர்கிறேன்…திறமையான நடிகர் – நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் என பலரும் தப்பு தண்டா படத்தில் பணியாற்றி வருவது எங்களின் நம்பிக்ககையை மேலும் அதிகரித்திருக்கிறது..”
 
“கேமராவை ஆன் செய்யும் முன் என்னை உங்களது மனதில் நினைத்து கொள்ளுங்கள்” என்று பாலு மகேந்திரா சார் கூறிய வார்த்தைகள் இன்னமும் என் காதில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. அதையே தான் நான் இந்த தப்பு தண்டா படத்தில் பின் பற்றினேன், இனி வரும் காலங்களிலும் பின் தொடர்வேன். என்றும் அவர் பெயருக்கு பெருமை சேர்க்கும் மாணவனாக நான் திகழ்வேன்..” என்று நம்பிக்கையோடு கூறுகிறார் தப்பு தண்டா படத்தின் இயக்குனர் ஸ்ரீகாந்தன்.
 
இன்றைய நாளில் இயக்குனர் சிகரம் பாலு மகேந்திரா நம்மோடு இல்லை என்றாலும், அவரின் சீடர்களாகிய இயக்குனர்கள் பாலா, சீனு ராமசாமி, ராம் மற்றும் வெற்றிமாறன் இயக்கும் படங்களில், பாலு மகேந்திராவின்  சுவடுகள் இருப்பதை நாம் உணர்ந்து  வருகிறோம். அந்த வரிசையில் தப்பு தண்டா படத்தின் இயக்குனர் ஸ்ரீகாந்தன் விரைவில் இணைவார் என்பதை உறுதியாகவே சொல்லலாம்.