எங்கேயும் எப்போதும்’ படத்தில் பிரிந்த காதல் ஜோடி ஜெய் – அஞ்சலி, தற்போது ஐந்து வருடம் கழித்து மீண்டும் ஒன்று சேர்கின்றனர்

என்னதான் உருகி உருகி காதலித்தாலும், விதி நினைப்பதுதான் இறுதி முடிவு என்பதை மிக அழகாக நம் மக்களுக்கு உணர்த்திய ஒரு எதார்த்தமான திரைப்படம், 2011 ஆம் ஆண்டு வெளியான எங்கேயும் எப்போதும். இந்த  படத்தில் காதல் ஜோடியாக நடித்த ஜெய் மற்றும் அஞ்சலி, தங்களின் இயல்பான நடிப்பால்  மக்களின் மனதில் ஆழமாக குடிக்கொண்டுவிட்டனர். அதுமட்டுமின்றி அவர்களின் ஜோடி பொருத்தம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற, தயாரிப்பாளர்களின் நம்பிக்கை நட்சத்திரமாகவே ஜெய் – அஞ்சலி ஜோடி கருதப்பட்டனர். மீண்டும் அவர்களை திரையில் காண முடியாதா  என்று எண்ணிய ரசிகர்களுக்கு சுமார் ஐந்து வருடம் கழித்து பலன் கிடைத்துள்ளது. புதுமுக இயக்குனர் சினிஷ் இயக்கி வரும்  காதல் கலந்த திகில் படத்தில் ஜெய் – அஞ்சலி மறுபடியும் ஜோடி சேர்ந்துள்ளனர். இன்னும் பெயர் சூட்டப்படாத இந்த  படத்திற்கு ஒளிப்பதிவாளராக R சரவணன், கலை இயக்குனராக சக்தி  வென்கட்டராஜ், படத்தொகுப்பாளராக ரூபன், ஸ்டன்ட் மாஸ்டராக திலிப் சுப்பராயன், ஆடை வடிவமைப்பாளராக NJ சத்யா மற்றும் நடன இயக்குனராக ஷெரிப் பணியாற்றிவருவது குறிப்பிடத்தக்கது.
 
“எங்கள் படத்தின் கதாநாயகியாக அஞ்சலியை நாங்கள் ஏற்கனவே ஒரு மனதாக முடிவு செய்திருந்தாலும், அவரின் பிறந்த நாளான இன்று இந்த தகவலை ஊடக நண்பர்களுக்கு தெரிவிப்பதில் மகிழ்ச்சி  அடைகிறோம். ஒரு திறமையான நடிகையாக அஞ்சலி மீது எங்களுக்கு மிகுந்த மதிப்பும் மரியாதையும் உண்டு. அஞ்சலியின் நடிப்பாற்றலுக்கு எல்லை என்பதே கிடையாது. எந்த கதாப்பாத்திரமாக இருந்தாலும் அதை திரையில் அப்படியே பிரதிபளிக்கும் ஆற்றலை உடையவர் அஞ்சலி. எங்கள் படத்தின் இந்த தனித்துவமான கதாப்பாத்திரத்திற்கு அஞ்சலி தான் பொருந்துவார் என்று சொன்ன அடுத்த கணமே, எங்கள் படக்குழுவினர் அனைவரும் அதை விமர்சையாக வரவேற்றனர். ஜெய் – அஞ்சலி கூட்டணி ஏற்படுத்திய இதே உற்சாகம் படம் முழுக்க நீடிக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை” என்கிறார் இயக்குனர் சினிஷ்.

Related posts