‘கனவு வாரியம்’ திரைப்படம் ‘ரெமி’ விருதை வென்றுள்ளது

உலகப் புகழ் பெற்ற ‘ரெமி’ விருதை பெறுவதற்காக டைரக்டர் அருண் சிதம்பரம் ஏப்ரல் 7-ம்
தேதி அமெரிக்கா செல்கிறார்.

டைரக்டர் அருண் சிதம்பரத்தின் ‘கனவு வாரியம்’ திரைப்படம் உலகப் புகழ் பெற்ற
‘ரெமி’ விருதை வென்றுள்ளது. அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் ஏப்ரல் 8 முதல் 17
ஆம் தேதி வரை நடைபெறும் 49 ஆவது சர்வதேச திரைப்பட விழாவில் (‘வேர்ல்ட்
ஃபெஸ்ட் ஹூஸ்டன்’) இந்த விருது வழங்கப்பட உள்ளது. ‘வேர்ல்ட் ஃபெஸ்ட்’ உலகின்
முதன்மையான திரைப்பட விழாக்களில் ஒன்றாகும். உலகின் புகழ்பெற்ற
இயக்குனர்களான ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் (ஜுராஸிக் பார்க், ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட்), ரிட்லி
ஸ்காட் (கிளேடியேட்டர், த மார்ஷியன்), ஜார்ஜ் லுகாஸ் (ஸ்டார் வார்ஸ்), ஆங் லீ (ஹல்க்,
லைப் ஆப் பை), பிரான்சிஸ் போர்ட் கப்போலா (தி காட்பாதர்), ஜான் லீ ஹான்கோக் (த பிளைண்ட்
சைட், சேவிங் மிஸ்டர். பேங்க்ஸ்) போன்ற பல தலைசிறந்த இயக்குனர்கள்
இந்தத் திரைப்பட விழாவின் கண்டுபிடிப்பே. நாற்பத்தி மூன்றுக்கும் மேற்பட்ட
நாடுகளிலிருந்து ஆயிரத்திற்கும் அதிகமான திரைப்படங்கள் ‘வேர்ல்ட் ஃபெஸ்ட்’ திரைப்பட
விழாவில் ரெமி விருதை வெல்ல போட்டி போடும். அவைகளில் மிக மிக தரமானவையே
தேர்வு செய்யப்படும். ‘கனவு வாரியம்’ திரைப்படம் உலகில் முதல் முறையாக வேர்ல்ட் ஃபெஸ்ட்
திரைப்பட விழாவில் திரையிடப்படுகிறது. அருண் சிதம்பரத்தின் கதை,
திரைக்கதை, வசனம், பாடல்கள், இயக்கத்தில் வெளியாகும் இந்தத் திரைப்படத்தின்
கதாநாயகனாக அருண் சிதம்பரம் அறிமுகமாகிறார்.

இது மட்டுமின்றி, ‘கனவு வாரியம்’ திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘கல்லா மண்ணா’
என்ற பாடலும் சர்வதேச அங்கீகாரம் பெற்றுள்ளது. அமெரிக்காவின்
ஒக்லஹோமா மாகாணத்தில் ஏப்ரல் 19 முதல் 24 வரை நடைபெறும் ’17 வது பேர் போன்ஸ்
சர்வதேச திரைப்பட விழாவில்’ இரண்டு விருதுகளுக்கு (சிறந்த வெளிநாட்டு பாடல்,
சிறந்த இளைய சமூகத்திற்கான பாடல்) இந்தப் பாடல் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
‘கல்லா மண்ணா’ பாடல் நகர மயமாக்கலிலும் வீடியோ கேம் மோகத்திலும் நாம் மறந்து
போன 51 கிராமிய விளையாட்டுக்களை, பாடல் வரிகளின் மூலமாகவும்,
காட்சியமைப்பின் மூலமாகவும் படம்பிடித்து காட்டியுள்ளது.

‘கனவு வாரியம்’ திரைப்படத்தின் இயக்குனர் அருண் சிதம்பரம் அமெரிக்காவில்
தனது மேற்படிப்பை (MS) முடித்துவிட்டு புகழ்பெற்ற வங்கியான ‘ஜே பி மார்கன்சேஸில்’ (சிகாகோவில்) பணி புரிந்தார். சினிமாவின் மீதுள்ள இலட்சியத்தால் இலட்சங்களில் சம்பாதிக்கும் வேலையை விட்டு விட்டு சென்னை வந்து ‘கனவு
வாரியம்’ திரைப்படத்தை எழுதி இயக்கி நடித்து உள்ளார். அருண் சிதம்பரம், மறைந்த
மக்களின் ஜனாதிபதி மேதகு அப்துல் கலாம் அவர்களால் பெரிதும் பாரட்டப்பட்டவர்.
அருண் சிதம்பரம், ‘ஆணழகன்’ சிதம்பரத்தின் இளைய மகன். கடந்த நாற்பது ஆண்டுகளாக
உடற்பயிற்சி கலையில் வல்லுனராக திகழும் ‘ஆணழகன்’ டாக்டர். அ. சிதம்பரம் மறைந்த
முதல்வர் மாண்பமை திரு.எம்.ஜி.ஆர் அவர்கள் உட்பட தமிழகத்தின் பல பிரபலங்களுக்கு
உடற்பயிற்சி ஆலோசகர்.

இவரும், கார்த்திக் சிதம்பரம் அவர்களும் இணைந்து ‘டிசிகாப் சினிமாஸ் (DCKAP CINEMAS)
பேனரில் ‘கனவு வாரியம்’ திரைப்படத்தை தயாரித்துள்ளனர்.